உங்கள் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய யோகக் கிரகங்கள் வலிமை அடைந்தும், தீமை செய்யக்கூடிய பகைக் கிரகங்கள் வலுவிழந்தும் இருந்தால் நீங்கள் இந்த உலகில் அனைத்துச் செல்வங்களையும் பெற்று அதிர்ஷ்டசாலியாக வாழ்வீர்கள் என்பது ஜோதிட விதி.
ஒரு கிரகம் வலிமையுடன் இருக்கிறதா அல்லது வலு இழந்து இருக்கிறதா என்பதை அக் கிரகம் இருக்கும் வீட்டின் நிலையை வைத்து கீழ்க்கண்டவாறு பிரிக்கிறது வேத ஜோதிடம்.
1) உச்சம்
2) மூலத்திரிகோணம்
3) ஆட்சி
4) நட்பு
5) சமம்
6) பகை
7) நீசம்
மேற்கண்ட அமைப்பை வைத்து ஒரு கிரகத்திற்கு மதிப்பெண் தருவதாக இருந்தால், நீச நிலைக்கு பூஜ்யமும், பகைக்குப் பத்து மதிப்பெண்களும், சமத்திற்கு இருபதும், நட்புக்கு நாற்பதும், ஆட்சிக்கு அறுபதும், மூலத் திரிகோணம் எண்பது, உச்சம் நூறு எனத் தோராயமாகக் கொள்ளலாம்.
இதன்படி ஒரு கிரகம் தனது வலிமை அனைத்தையும் இழக்கின்ற நிலை நீசம் எனப் படுகிறது.
நீசநிலையில் ஒரு கிரகம் இருந்தால் அந்தக் கிரகம் தனது காரகத்துவப் பலன்களையும், ஆதிபத்தியப் பலன்களையும் தர இயலாது என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது.
அதாவது ஒரு கிரகம் நீசம் பெற்றால் அக் கிரகம் சம்பந்தமான எந்த ஒரு விஷயமும் முழுமையாக உங்களுக்கு கிடைக்காது, அந்தக் கிரகத்தால் உங்களுக்கு எவ்வித பயனும் இருக்காது என்பது இதன் உட்பொருள்.
விதி என்ற ஒன்று இருந்தால் விலக்கு என்பது இருந்தே தீரும் என்பதன்படி, ஒரு கிரகம் நீசபங்கம் பெறும் பொழுது இழந்த தன் வலுவை திரும்பப் பெறுகிறது என்பதும் வேத ஜோதிட விதிதான்.
அதன்படி இந்த நீசபங்க அமைப்பில் மறைந்திருக்கும் சூட்சுமம் என்னவெனில் ஒரு கிரகம் முறையான நீசபங்கத்தைப் பெறும் பொழுது, அது உச்சத்தை விட மேலான ஒரு வலிமையை அடையும் என்பதே.
இது மதிப்பெண் நிலையில் 100க்கு 100 என்பதையும் தாண்டி 120 என்கிற ஒரு வினோத நிலையைப் பெறும். அதே நேரத்தில் இன்னொரு விளைவாக நீசபங்கம் பெறும் கிரகம் ஆரம்பத்தில் நீசத்தைத் தந்துதான் பிறகு வளர்ச்சியைத் தரும். அதாவது அந்தக் கிரகம் முதலில் ஒன்றுமில்லாத நிலையை ஏற்படுத்தித்தான் பிறகு உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
உதாரணமாக லக்னாதிபதி கிரகம் நீசம் அடைந்து, முறையான நீசபங்கம் பெற்றிருந்தால், நீங்கள் வாழ்க்கையில் முதலில் கஷ்டப்பட்டு, ஒன்றுமில்லாத நிலையில் இருந்து, வாழ்க்கையின் பிற்பகுதியில் பிரமிக்கத்தக்க அளவில் முன்னேற்றம் அடைவீர்கள்.
அதுபோலவே நீசக் கிரகம் எந்த ஆதிபத்தியத்திற்கு உரியதோ, அதுவும் முதலில் ஒன்றுமில்லாமல் இருந்து பிறகு வளர்ச்சி பெறும்.
முறையான நீசபங்கம் என்பது உச்சத்தை விட மேலான நிலை என்பதற்கு என்னால் ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும்.
எடுத்துக்காட்டாக, சூரியன் நீசம் பெற்றால் அரசு வேலை இல்லை. அரச லாபம் கிடையாது. தலைமைப் பதவியைப் பற்றிக் கனவுகூட காண முடியாது..!
சரி....
சுக்கிரன் நீசம் பெற்றால் கலைத்துறையைப் பற்றிக் கனவுகூடக் காண முடியாது. நடிப்பு வராது. பொதுமக்கள் மத்தியில் புகழுடன் தோன்ற முடியாது. குறிப்பாக சினிமாவில் ஜெயிக்க முடியாது.
இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகர், இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சுக்கிரன் நீசமான அமைப்பில் பிறந்தவர்.
புதன் நீசம் பெற்றால் அறிவாளியாக முடியாது. நிபுணத்துவம் இருக்காது. சிந்தனைத் திறன் சிறிதளவே இருக்கும். கணிதத் திறன் வராது. எதையும் புதிதாக கண்டுபிடிக்க முடியாது.
உலக வரலாற்றில் இதுவரை பிறந்த விஞ்ஞானிகளில் முதலாமவர் என்று போற்றப்படும் மாபெரும் விஞ்ஞானி, பிரபஞ்சம் பற்றிய உண்மைகளைக் கூறும் சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்த இயற்பியல் மேதை, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் புதன் நீசம் பெற்ற நிலையில் பிறந்தவர்.
குரு நீசம் பெற்றால் ஆன்மீகத்தில் உயர்வில்லை. தெய்வ அருள் கிடைக்காது. ஆனால் தன் பக்தர்களால் தெய்வத்தின் நிலையில் வைத்து வணங்கப்படும் புனிதர், பகவான் ஸ்ரீசத்யசாய்பாபா குரு மகரத்தில் நீசம் பெற்ற நிலையில் பிறந்தவர்.
இதைப்போல இன்னும் நிறைய உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.
அதேநேரத்தில் இது போன்றவர்கள் முதலில் வாழ்வில் நீச நிலையில் (ஒன்றுமில்லாத நிலையில்) இருந்து பிறகு தம் துறையில் உச்சத்திற்கு சென்றவர்களே.
பெரும்பாலான ஜோதிடர்களுக்கு இந்த நீச பங்கத்தை அளவிடுவதில் குழப்பம் ஏற்படும். உனக்கு நீச பங்க ராஜயோகம் இருக்கிறது என்று ஜாதகரிடம் சொல்லுவார். கேட்பவரும் ராஜயோகத்தை எண்ணி கனவு காணும் நிலையில் அந்த தசை அவரிடம் உள்ளதையும் பறித்துக் கொண்டிருக்கும்.
அப்படியானால் முறையான நீசபங்கம் என்பது என்ன? அதை எப்படிக் கணக்கிடுவது?
அதற்கு ஏராளமான விதிகள் உள்ளன.
முக்கியமானவைகளைச் சொல்கிறேன்.
1) நீசனுக்கு வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் பெறுவது.
2) நீசக்கிரகம் பரிவர்த்தனை பெறுவது.
3) நீசன் வர்க்கோத்தமம் பெறுவது.
4) நீசக்கிரகத்துடன் ஒரு உச்சன் இணைவது.
5) நீசன் லக்னம் அல்லது சந்திர கேந்திரத்தில் இருப்பது.
6) நீசனுக்கு வீடு கொடுத்தவன் சந்திர கேந்திரத்தில் இருப்பது.
7) நீசனின் ராசியதிபதி பரிவர்த்தனை ஆவது.
8) நீசனை இன்னொரு நீசக்கிரகம் பார்ப்பது
9) நீசன் வக்கிரம் அடைவது
10) நீசன் அம்சத்தில் சுபவர்க்கம் பெறுவது
இது போன்ற விதிகளில்
பெரும்பாலானவற்றின்படி ஒரு நீசக்கிரகம், நீசபங்கத்தைப் பெற்று, அதாவது ஒரு நீசக்கிரகம், சந்திர கேந்திரத்தில் இருந்து, அதனுடன் உச்சக் கிரகமும் இணைந்து, நீசன் வர்க்கோத்தமும் பெற்று, நீச நாதன் சந்திர கேந்திரத்தில் இருந்து, வீடு கொடுத்தவன் பரிவர்த்தனையும் பெற்று இதுபோல அதிகமான முறைகளில் நீசபங்கம் பெற்றால், அதுவே முறையான நீசபங்கம் ஆகும்.
இதுபோன்ற நிலைகளில் மட்டுமே அந்தக் கிரகம் நீச பங்க ராஜயோகத்தைச் செய்யும். அப்போதுதான் அந்த நீசன் உங்களை தன் காரகத்துவங்களில் (செயல்பாடுகளில்) வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்வான்.
No comments:
Post a Comment