Thursday, July 25, 2019

சுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா ? மற்றுமொரு பார்வை

சுக்கிர தசை உனக்கு ஆரம்பிக்கப் போகிறது என்றாலே மயங்காதவர்கள் யாரும் இல்லை. வாழ்வில் உச்ச நிலைக்கு சென்று கொண்டிருக்கும் ஒருவரை அல்லது மேல் நிலைக்குச் சென்று விட்ட ஒருவரை “அவனுக்கென்னப்பா சுக்கிர தசை” என்று சொல்வது உலகியல் வழக்கு.
ஆனால் நடைமுறையில் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் சுக்கிரனின் தசை ஆரம்பித்ததும் தன் நிலையிலிருந்து சரிவடைவதும், தசையின் முடிவில் கீழான நிலைக்கு வருவதையும் பார்க்கிறோம். எனவே சுக்கிரனின் தசை நடக்கும் ஒருவர் கொடுத்து வைத்தவர் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை சரிதானா என்பதைப் பார்ப்போம்.
முதலில் சுக்கிர தசைக்கு மட்டும் இந்த எதிர்பார்ப்பு ஏன் என்று பார்க்கப் போவோமேயானால், வேத ஜோதிடத்தில் ஒரு மனிதனின் ஆயுளை நூற்றியிருபது வருடங்களாகப் பிரித்து, அவற்றை சமமற்ற ஒன்பது பங்குகளாக அமைத்து, மனித வாழ்வின் நன்மை, தீமைகளை பகுதி பகுதியாகக் கணித்துச் சொல்லும் தசா, புக்தி வருடங்கள் என்ற அமைப்பை நமக்கு அருளிய பராசர மகரிஷி அவர்கள் சுக்கிரனுக்கு மட்டும் இருபது வருடங்களை ஒதுக்கியிருக்கிறார்.
ஒரு மனிதனின் வாழ்வில் சுக்கிரதசை வருமானால் அது இருபது வருடங்களுக்கு அவனை ஆளுமை செய்யும் என்பதோடு, ஒன்பது கிரக தசைகளிலும் அதிகமான வருடங்களைக் கொண்டது சுக்கிரன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மனிதன், எண்பது வயது வரை உயிரோடு இருப்பான் எனத் தோராயமாகக் கொண்டால் அவனது வாழ்நாளின் கால் பகுதியை சுக்கிரன் எடுத்துக் கொள்வார். விபரமறியாப் பருவங்களான குழந்தை மற்றும் பள்ளி பருவத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கைப் பகுதியை சுக்கிரன் ஆக்கிரமித்துக் கொள்வார் என்பதால்தான், ஒருவருக்கு சுக்கிர தசை வரப் போகிறது எனும் போது அதைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிறது.
சுக்கிரன் ஒருவரே நல்ல மனைவி, அருமையான வீடு, உயர்தரமான வாகனம், உல்லாச வாழ்க்கை, எங்கும் எதிலும் சொகுசாக இருத்தல், பெண்கள் உள்ளிட்ட அனைத்து விதமான இன்பம் ஆகியவற்றைத் தருபவர் என்பதாலும் சுக்கிர தசை வரப் போகிறது என்றவுடன் இதயத் துடிப்பு அதிகமாகிறது.
ஜோதிடம் எனும் தேவ ரகசியம் கட்டுரைகளின் ஆரம்பத்திலேயே ஒரு முக்கிய விஷயத்தை எளிமையாக விளக்கியிருந்தேன்.
நமது ஞானிகள் வானில் ஒரு ஒழுங்கான நியதிக்குக் கட்டுப்பட்டு சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்களை மனித வடிவமாக்கி, அவர்களுக்கு கணவன்-மனைவி, தந்தை-மகன் போன்ற உறவுமுறைகளையும் கற்பித்ததற்கு மறைமுகமாக விளக்கங்கள் இருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரைகளின் ஆரம்ப அத்தியாயத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.
ஒன்பது கிரகங்களுக்குள்ளும் ஞானிகள் நட்பு, பகை உறவுகளை நமக்கு விளக்கிச் சொன்னது, அந்தக் கிரகங்களின் தசைகள் ஒருவருக்கு வரும்போது, எது நன்மை செய்யும் எது தீமையைத் தரும் என்பதை எளிமையாகப் புரிந்து கொள்வதற்காகத்தான்.
அதன்படி கிரகங்களுக்குள் ஜென்ம விரோதிகளாக உருவகப்படுத்தப்பட்ட குரு, சுக்கிரன் இருவரும் அடுத்தவரின் லக்னங்களுக்கு நன்மைகளைச் செய்ய மாட்டார்கள். அப்படி அவர்கள் நன்மைகளைத் தர வேண்டுமெனில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்க வேண்டும்.
அதாவது அசுர குரு எனப்படும் சுக்கிரனின் ரிஷப, துலாம் லக்னங்களுக்கு தேவகுருவான வியாழன் நன்மைகளைத் தரமாட்டார். அதேபோல தனக்கு எதிர்த் தன்மை உடையவரான குருவின் தனுசு, மீன லக்னங்களுக்கு சுக்கிரன் நல்லது செய்யமாட்டார்.
அதிலும் ஒரு ஜாதகருக்கு எதிரிகளை உருவாக்கித் தரும் மறைவு ஸ்தானமான ஆறாம் பாவத்தின் அதிபதிகளாக இவர்கள் இருவரும் அமைகையில் தங்களது தசையில் கெடுபலன்களை அதிகமாகச் செய்வார்கள். இந்நிலை தனுசு லக்னத்திற்கு ஆறாம் பாவ அதிபதியாக சுக்கிரன் வரும்போதும், துலாம் லக்னத்திற்கு ஆறாம் பாவ அதிபதியாக குரு வரும்போதும் நடக்கும்.
துலாம் லக்னத்திற்கு குரு உச்சம் பெறும் நிலையில் ஆறாம் பாவத்தைப் பார்த்து வலுப்படுத்தி, வேறு வகையில் பலவீனமடையாவிட்டால் அந்த ஜாதகருக்கு ஆறாம் பாவத்தின் கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு, சிறை போன்ற கெடுபலன்களை தனது தசையில் வலிமையுடன் செய்வார்.
அதேபோல சுக்கிரன் தனுசு லக்னத்திற்கு ஆறாமிடத்தில் ஆட்சி பெற்றிருந்தாலோ, வேறுவகைகளில் ஆறாமிடத்தோடு தொடர்பு கொண்டு அந்த பாவத்தை பலப்படுத்தி இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு கெடுபலன்களையே அதிகமாகத்  தருவார். எனவே சுக்கிர தசை மற்றும் புக்தி நன்மைகளைத் தரும் என்பது எல்லா ஜாதகங்களுக்கும் பொருந்தாது.
அதேநேரத்தில் பாவத்பாவ விதிகளின்படி ஒரு ஸ்தானாதிபதி அந்த பாவத்திற்கு ஆறு, எட்டில் மறைந்தால் கெடுதல்களைச் செய்ய மாட்டார். இதுபோன்ற நிலையில் தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் ஆறாம் பாவத்திற்கு ஆறாமிடமான பதினொன்றாம் வீட்டில் இருந்தாலும், துலாம் லக்னத்திற்கு குரு பதினொன்றாம் வீட்டில் இருந்தாலும் கெடுதல்களைச் செய்ய மாட்டார்கள்.
ஆறாமிடத்தை அடுத்து அஷ்டமம் எனும் எட்டாமிடத்திற்கு சுக்கிரன் அதிபதியாகும் நிலை மீன லக்னத்திற்கு ஏற்படும். சுக்கிரன் மீன லக்னத்திற்கு வலுவாக இருக்கும் நிலையில் அவரது தசையில் பெரும்பாலும் ஜாதகனை வெளிநாடு, வெளிமாநிலங்களில் அலைந்து திரிந்து பொருள் தேட வைப்பார்.
சிலநிலைகளில் பெண்கள் விஷயத்தில் அவமானம் வழக்கு போன்ற விஷயங்களையும் செய்வார். அதுபோலவே ரிஷபத்திற்கு எட்டிற்கு அதிபதியாகும் குருவும் தனித்து வலுப்பெறும் நிலையில் கெடுதல்களையும், வெளிநாடு வெளிமாநில அமைப்புகளையும் தருவார்.
ஆனால் எட்டாமிடத்தை விட ஆறாமிடமே அதிகமான அசுபத் தன்மை வாய்ந்தது என்பதாலும், ஒரு ஜாதகனின் எதிரியையும், அவனுக்கு வேண்டாதவைகளையும் குறிக்கும் பாவம் ஆறாமிடம் என்பதாலும், தனுசு லக்னத்திற்கு லக்னாதிபதி குரு வலுவிழந்து, சுக்கிரன் ஆறில் ஆட்சி பெறும் போதோ, அல்லது வேறு வகைகளில் வலுப் பெற்று இருக்கும்போதோ சுக்கிர தசை வந்தால் கொடிய பலன்கள் நடக்கும்.
இதுபோன்ற நிலையில் சுக்கிர தசை ஜாதகரை மிகக் கீழான ஒரு நிலைக்கு கொண்டு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இதுபோன்ற ஜாதக அமைப்பில் கேது தசையில் வலிமையான அதிகார அமைப்பில் இருந்து, பொருள் சம்பாதித்து, சுக்கிர தசையில் தவறு செய்து பிடிபட்டு, அதிகாரத்தையும், அந்தஸ்தையும் இழந்து வழக்கு, சிறை என்று அலைந்து திரியும் ஜாதகங்களை என்னால் உதாரணம் காட்ட முடியும்.
மேலும் சுக்கிரன், பெண்கள், காமம், உல்லாசம், ஆடம்பரம், கேளிக்கை இவற்றிற்கு அதிபதி என்பதால் சுக்கிர தசையில் பெண்களின் மூலமாக கெடுதல்களும், அவமானங்களும், தோல்விகளும் இருக்கும். இப்படிப்பட்ட நிலை துலாம் லக்னத்திற்கு சுக்கிரன் வலுவிழந்து குரு ஆறாமிடத்தில் ஆட்சி பெற்றாலும் நடக்கும்.
எந்த ஒரு லக்னத்திற்குமே லக்னாதிபதி வலுவிழந்திருக்கும் நிலையில்  ஆறுக்குடையவன் பலம் பெற்றிருக்கக் கூடாது. அப்படி ஒருநிலையில் நாம் வலுவிழந்து நம் எதிரி பலத்தோடு இருக்கிறார் என்பதுதான் பொருள்.
இதுபோன்ற ஒரு நிலை ஜாதகத்தில் அமைந்தால் அவரது முன்னேற்றத்திற்குத் தடை இருக்கும் என்பது ஒரு சூட்சுமமான, ஞானிகளால் வெளிப்படையாகச் சொல்லப்படாத விதி. இதையே அடிக்கடி கட்டுரைகளிலும் கேள்வி-பதில்களிலும் எழுதி வருகிறேன்.
மேலும் குரு, சுக்கிரனுக்கு எதிர்த் தன்மையுடையவர் மற்றும் ஆகாதவர்  என்றாலும் நமது மூல நூல்களில் சுக்கிரனின் அறிவிக்கப்பட்ட எதிரியாகச் சொல்லப்படுவது சூரியனும், சந்திரனும்தான்.
எனவே இவர்கள் இருவரின் கடக, சிம்ம லக்னங்களுக்கும் சுக்கிரன் வலிமையாகத் தனியாக இருக்கும் அமைப்பில் முழுமையாக நன்மைகளைத் தர மாட்டார். இதுபோன்ற அமைப்பில் தனது வீடு, வாகனம், பெண் சுகம் போன்ற காரகத்துவங்களைக் கொடுத்து தனது ஆதிபத்தியத்தைக் கெடுப்பார்.
மற்றபடி சுக்கிரனின் நட்பு லக்னங்களான மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு சுக்கிர தசை அபாரமான நன்மைகளைச் செய்யும். மேற்கண்ட லக்னங்களுக்கு சுக்கிரன் வலுவிழந்த நிலையில் இருந்தாலும் சுக்கிர தசை பெரிய அளவில் தீமைகளைச் செய்யாது.
ஒரு முக்கியக் கருத்தாக எந்த ஒரு தசையிலும் இரு ஆதிபத்தியமுள்ள கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகியோர் இரண்டு விதமான முரண்பட்ட பலன்களை செய்வார்கள் என்பதால் ஒரு மகா தசை முழுக்க முழுக்க நன்மைகளையோ, முழுவதும் தீமைகளையோ செய்து விடுவது இல்லை.
நல்ல ஆதிபத்தியத்தின்படி முதலில் நன்மைகளைச் செய்யும் ஒரு கிரகம் அடுத்து தீய ஆதிபத்தியத்தின்படி தசையின் பிற்பகுதியில் கெடுபலன்களையோ, சாதகமற்ற பலன்களையோ செய்யும்.
ஒரு தசையின் முதற் பகுதியில் ஒரு கிரகம் தீமைகளைச் செய்யுமாயின், அடித்த கையே அணைக்கும் என்பதன்படி அதே கிரகத்தின் பிற்பகுதி தசை முதலில் தந்த தீமைகளால் நடந்த விளைவுகளை நீக்கி நன்மைகளைச் செய்து விட்டுப் போகும். இதுவே சிருஷ்டியின் ரகசியம்.
சுக்கிர தசைக்கு இந்த அமைப்பு சரிபாதியாக அமையும்போது, சுக்கிரன் நன்மைகளை செய்யும் நிலையில் இருந்தால், தனது தசையின் முதல் பத்து வருடங்கள்  தனது நல்ல காரகத்துவங்களை ஜாதகருக்கு குறைவின்றித் தருவார்.
ஜாதகனின் வயதைப் பொருத்து அவருக்கு திருமணத்தின் மூலம் நல்ல மனைவியையும், அருமையான சொகுசான வீடு, உயர்தர வாகனம், பெண் குழந்தைகள், எந்த ஒரு நிலையிலும் சொகுசாக, சுகமாக வாழும் நிலை, பெண்களால் நன்மை போன்ற அமைப்புகளைச் செய்வார்.
அதேபோல இளம் பருவத்தில் வரும் சுக்கிர தசை மற்றும் புக்திகள் ஒரு ஜாதகருக்கு காதல் அனுபவங்களை வலுவாகத் தரும். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து வரும் இருவரை திடீரென ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி காதல் எனும் அமைப்பில் நுழைய வைப்பவர் சுக்கிரன்தான்.
காதலின் அடிப்படையே காமம்தான் என்பதால் சுக்கிரன் வலுப் பெற்றவர்கள் காதல் என்ற பெயரில் காமத்தைப் பெறுவதிலேயே குறியாக இருப்பார்கள்.
கலைத்துறையில் ஜெயிப்பவர் யார்?
கலைகளின் அதிபதி சுக்கிரன்தான். இசை, நடனம், பாட்டு, நடிப்பு போன்ற அனைத்திற்கும் அடிப்படை இவர்தான் என்பதால் ஜாதகத்தில் இவர் எந்த பாவத்தோடு தொடர்பு கொள்கிறாரோ அந்த பாவத்திற்கு சம்பந்தப்பட்ட கலைத்துறையில் ஜாதகரை ஈடுபடுத்துவார்.
உதாரணமாக சுக்கிரன் மூன்றாமிடத்தோடு சம்பந்தப்பட்டால் இசையிலும், லக்னம் மற்றும் ஐந்து பத்தாமிடங்களோடு தொடர்பு கொண்டால் நடனம், நடிப்பிலும், சினிமா எடுப்பதிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதிலும் ஒருவருக்கு ஆர்வம் இருக்கும். மேற்கண்ட துறைகளில் ஜாதகர் புகழோடும் இருப்பார்.
ஒருவருக்கு சுக்கிர தசையோ, சுக்கிர புக்தியோ நடைபெற ஆரம்பித்து விட்டாலே அவருக்கு சினிமா மற்றும் மீடியாத் துறைகளில் ஆர்வம் வந்து விடும். குறிப்பாக சிம்ம லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுக்கிரன் ஜீவனாதிபதி ஆவதால் இந்த லக்னத்தவர்களே அதிகமாக கலைத்துறையில் முயற்சிப்பவராக இருப்பார்கள்.
ஜாதகத்தில் சுக்கிரனின் வலுவைப் பொறுத்து இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கேமிரா இயக்குனர், லைட்பாய், டிராலி தள்ளுபவர், ஸ்டுடியோ வாட்ச்மேன் என அவரவரின் ஜாதக வலுக்கேற்ப ஒருவர் கலைத்துறையில் இருப்பார்.
சுக்கிரன் சுப வலுவில்லாமல் அந்த ஜாதகருக்கு தீமை தரும் அமைப்பில் இருந்தால் பயனற்ற வழிகளில் கலைத்துறையில் வாய்ப்புத் தேட வைத்து வாய்ப்பும் கிடைக்காமல், வேறு வாழ்க்கை வழிகளையும் காட்டாமல் இளமைப் பருவம்  முழுவதையும் தொலைக்க வைத்து பின்னால் வருந்தவும் வைப்பார்.

கேதுவின் சூட்சுமங்கள்

ஒரு கிரகத்தின் செயல்பாடுகள் எனப்படும் காரகத்துவங்களை வைத்து அடையாளப் படுத்தப் படுகையில் வேத ஜோதிடத்தில் ராகு போகக் காரகன் என்றும் கேது ஞானக் காரகன் என்றும் குறிப்பிடப் படுகிறார்கள்.
அருள் அணி, பொருள் அணி என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படும் குரு, சுக்ர தலைமையிலான இரண்டு பிரிவுகளுக்கிடையே, குருவின் நண்பர்களான சூரிய, சந்திர, செவ்வாயின் லக்னங்களுக்கும், குருவின் லக்னங்களுக்கும் சாதகமாகச் செயல்படும் குணத்தைக் கொண்டவர் கேது.
ராகுவும், கேதுவும் ஒரு நேர்கோட்டின் இரண்டு எதிரெதிர் முனைகள் என்பதை வேத ஜோதிடம் ஏற்கெனவே நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறது.
ஒளி உட்புக முடியாத, ஒரு ஆழமான இருட்டின் கடினமான, கருப்பான மையப் பகுதி ராகு என்றால், அதன் மையத்தில் இருந்து விலக விலக, இருள் குறைந்து கொண்டே வந்து ஒளியும், இருளும் சங்கமிக்கும் லேசான ஆரஞ்சு நிறமான ஓரப் பகுதி கேது ஆவார். இதன் காரணமாகவே நமது மூலநூல்கள் ராகுவை கரும்பாம்பு என்றும், கேதுவை செம்பாம்பு என்றும் குறிப்பிடுகின்றன.
இவ்வுலகில் கிடைக்கும் மண், பெண், பொன் போன்ற சராசரி உலக இன்பங்களை அனுபவிக்க வைப்பவர் ராகு என்றால் அவ்வுலக இன்பமான அளப்பரிய ஆன்மிக அருள் இன்பத்தை அனுபவிக்க வைப்பவர் கேது ஆவார்.
அருளாட்சி அற்புதங்களான நமது பேராற்றல் மிக்க திருக் கோவில்களுக்குச் செல்பவர்கள் ஒரு விஷயத்தை தெளிவாகக் கவனித்திருக்கலாம். நம்முடைய  கோவில்களில் வரிசையாக வீற்றிருக்கும் ஆழ்வார்கள், நாயன்மார்களில் பெரும்பாலானோர் கேது மற்றும் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பவர்கள் என்பதே அது.
இன்னும் நுணுக்கமாகச் சொல்லப் போனால் நமது மேலான இந்து மதத்தைத்   தழைத்தோங்கச் செய்த அருட் பெரியார்களான தவத்திரு திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், அருள்திரு மாணிக்க வாசகர், அருளாளர் சுந்தர் ஆகிய நால்வரும் ராகு-கேதுக்களின் நட்சத்திரங்களில் பிறந்தவர்களே
இவர்களில் சம்பந்தர் வைகாசி மூலம், நாவுக்கரசர் சித்திரை சதயம், சுந்தரர் ஆடி சுவாதி, மாணிக்க வாசகர் ஆனி மகம் என்பதே ராகு-கேதுக்களின் ஞானம் தரும் பெருமையை நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கும்.
ஒன்பது கிரகங்களிலும் ஒரு மனிதனை ஆன்மிகத்தில் ஈடுபடுத்தக் கூடியவை குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களாகும். இவர்களில் கேது சுபத்துவம் பெற்ற குருவுடனும், சூட்சும வலுப் பெற்ற சனியுடனும் தொடர்பு கொள்ளும்போது ஒருவருக்கு அளவற்ற ஆன்மிக ஈடுபாட்டினைத் தருவார்.
இதுபோன்ற அமைப்புகளில் கேதுவிற்கு வலுவான இடங்கள் என்று நமது மூல நூல்கள் குறிப்பிடும் கும்பம், விருச்சிகம், கன்னி ஆகிய இடங்களிலோ தனுசு, மீனமாகிய குருவின் வீடுகளிலோ, சனியின் மகரத்தில் சூட்சும வலுப் பெற்றோ, குரு அல்லது சனியின் தொடர்பு அல்லது இணைவில் கேது இருக்கும் நிலையில் ஒருவரை ஞானத்தின் உச்ச நிலைக்குச் செல்ல வைப்பார்.
லக்னத்துடனோ, ராசி எனப்படும் சந்திரனுடனோ சுபத்துவமும், சூட்சும வலுவும் பெற்று கேது சம்பந்தப்படுவாரே எனில், ஒருவரால் பிரம்மத்தை உணரும் ஞானியாக முடியும். போலித்தனமற்ற, பற்றற்ற, உண்மையான, உலகை உய்விக்க வந்த ஞானப் பெரியார்கள் கேதுவால் உருவாக்கப்பட்டவர்கள்.
அதேபோல மனம், சிந்தனை, பாக்கியம் எனப்படும் ஒரு ஜாதகத்தின் ஐந்து ஒன்பது எனப்படும் வீடுகளோடு, கேது நல்ல நிலையில் சம்பந்தப்பட்டிருந்தாலும் ஒருவருக்கு ஆன்மிக ஈடுபாடு வரும். இதுபோன்ற ஜாதக அமைப்புள்ள ஒருவர் கேதுவின் சுப, சூட்சும வலுவினைப் பொருத்து ஒரு ஆன்மிக மடத்தின் தலைவர், ஜகத்குரு, ஆகிய நிலையிலிருந்து சிறு கிராமத்துக் கோவிலின் பூசாரி என்ற நிலை வரை இருப்பார்.
உண்மைகளையும், ரகசியங்களையும், சூட்சுமங்களையும் உணர வைப்பவர் கேது தான். ஒருவரின் ஜாதகத்தில் கேது இருக்கும் படிநிலை வலுவைப் பொருத்தும், அவரது சுப, சூட்சும வலுவைப் பொருத்தும் ஒருவரால் தான் இருக்கும் துறையின் மறைபொருள் அம்சங்களை உணர முடியும்.
இதுபோன்ற ஜாதக அமைப்புள்ளவர்களுக்கு ஒரு பொருளின் அல்லது ஒரு கருத்தின் இன்னொரு பரிமாணம் புரியும். இது விஞ்ஞானத்திற்கும், ஆன்மிகம் எனப்படும் மெய்ஞானத்திற்கும் பொருந்தும்.
விஞ்ஞானியும், ஞானியும் ஒரு கண்டுபிடிப்பாளன் என்ற வகையில் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள் இருவரையும் உருவாக்குபவர் கேது தான். ஜாதகத்தில் புதன் நேர்வலுப் பெற்று கேதுவோடு சம்பந்தப்பட்டால் அவர் விஞ்ஞானியாகவும், புதனை விட குருவோ சனியோ வலுப்பெற்று அவர் கேதுவோடு சம்பந்தப்பட்டால் அவர் மெய்ஞானியாகவோ இருப்பார்.
அதேபோல கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகியவற்றில் சந்திரனோ லக்னமோ அமர்ந்திருந்தாலும் அந்த ஜாதகருக்கு நமது வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்ற சூட்சுமங்களை உணரும் ஆற்றலும் வரும்.
இன்னுமொரு கருத்தாக ராகுவும், கேதுவும் இருவேறு கிரகங்களாக நமக்குச் சொல்லப் பட்டிருந்தாலும் அடிப்படையில் இவை இரண்டும் ஒரே கிரகம் தான். அதனால்தான் ராகுவும், கேதுவும் ஒரு பாம்பாக வர்ணிக்கப்பட்டு பாம்பின் தலையாக ராகுவும், வாலாக கேதுவும் உருவகப் படுத்தப்பட்டு நமக்குச் சொல்லப்பட்டன.
எனவே ராகு அல்லது கேது நல்ல பலன்களைத் தரவேண்டுமெனில் இருவருமே ஒரே அமைப்பின், ஒரே விஷயத்தின் நேரெதிர்  முனைகளைத் தொடர்பு கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த ஜாதகருக்கு எதிலும் ஒரு முழுமைத்தனத்தை, சாதிக்கக்கூடிய அமைப்பை ராகு, கேதுக்கள் தங்களது தசையில் தருவார்கள்.
இதற்கு உதாரணமாக இணை அமைப்புகளாகச் சொல்லப்படும் லக்னம், ராசி இரண்டும் ராகு,கேதுக்களின் தொடர்பில் அல்லது நட்சத்திரங்களில் இருப்பது, கணவன் சதயம் நட்சத்திரமாகி, மனைவி மகம் நட்சத்திரமாக இருப்பது போன்ற அமைப்புகளைச் சொல்லலாம்.
அதேநேரத்தில் ராகு தசையைப் போல, பொருள் வரவை கேது தசை அளிப்பது இல்லை. பொருளைத் தருவது ராகு என்றும் அருளைத் தருவது கேது என்றும் நமது மூலநூல்கள் தெளிவாக பிரித்து சொல்வதாலேயே பொருளால் கிடைக்கும் போகங்களை அனுபவிக்க வைக்கும் ராகு போகக் காரகன் என்றும் அருளால் கிடைக்கும் தெய்வீக ஞானத்தை அனுபவிக்க வைக்கும் கேது ஞானக்காரகன் என்றும் ஞானிகளால் பிரித்துக் காட்டப்பட்டன.
இருக்கும் வீட்டின் அதிபதியின் செயல்களைப் பிரதிபலிக்கக் கூடியவர்கள் ராகு-கேதுக்கள் என்பதால் ஒரு ஜாதகத்தில் கேது பொருளைத் தரும் சுக்கிரனின் வீடுகளில் அமர்ந்தோ, சுக்கிரனுடன் நல்ல நிலைகளில் சம்பந்தப்பட்டோ, அல்லது அந்த ஜாதகத்தின் யோகாதிபதியுடன் தொடர்பு கொண்டோ இருக்கும் நேரத்தில் பொருளையும் தனது தசையில் நேர்வழிகளில் தருவார்.
பொருள் தரும் விஷயத்தில் ராகுவிற்கும், கேதுவிற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் எப்படி இந்த பணம் வந்தது என்று மறைமுகமான வழிகளில், வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு ராகு பணம் தருவார் என்றால் வெளிப்படையாகச் சொல்லக் கூடிய கவுரவமான வழிகளில் கேது பணத்தைத் தருவார்.
அதுபோலவே தோஷ அமைப்புக்களிலும் ராகுவைப் போல கடுமையான கெடுபலன்களை கேது செய்வது இல்லை. உதாரணமாக ஒரு கிரகத்தின் அருகில் மிக நெருக்கமாகச் செல்லும் ராகு அக் கிரகத்தின் அனைத்து காரகத்துவங்களையும் பறித்து தானே தன் தசை வரும் போது அந்த ஜாதகருக்கு அளிப்பார் என்பதே ஏற்கனவே ராகுவின் சூட்சுமங்களில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
இதன் உண்மையான அர்த்தம் என்னவெனில் ராகுவுடன் மிக நெருக்கமாக இணையும் கிரகம் முழுமையாக ராகுவிடம் சரணடைந்து வலிமை இழக்கும் என்பதுதான்.
இதுபோன்ற வலுக்கட்டாயமாகப் பறிக்கும் வேலைகளையும், மற்றக் கிரகத்தை ஆக்கிரமிக்கும் வேலைகளையும் கேது செய்வது இல்லை. கேதுவுடன் மிக நெருக்கமாக இணையும் ஒரு கிரகம் ஒருபோதும் தனது சக்திகளை முழுக்க இழப்பது இல்லை. தன்னுடைய செயல்பாடுகளை ஜாதகருக்குத் தரும் வலிமை அந்தக் கிரகத்திற்கு இருக்கவே செய்யும்.
ராகு என்பது ஆழமான, ஒளி புக முடியாத, எதையும் பார்க்க முடியாத ஒரு இருட்டு என்பதால் அதனுடன் இணையும் ஒரு கிரகத்தின் ஒளி வெளியே தெரிய முடியாது. ராகுவிடமிருந்து அந்தக் கிரகத்தின் ஒளி தப்பித்து அந்த மனிதனுக்கு நன்மைகளையோ, தீமைகளையோ செய்ய முடியாது.
ஆனால் கேது என்பது ஆழமற்ற, நாம் ஊடுருவிப் பார்க்கக்கூடிய, மேலோட்டமான இருட்டு என்பதால் கேதுவுடன் இணையும் ஒரு கிரகத்தின் சுய ஒளி ஓரளவு உயிர்ப்புடன், தாக்குப் பிடிக்கும் திறனுடன் இருக்கும். முழுக்க முழுக்க அந்தக் கிரகத்தின் ஒளி கேதுவுக்குள் அமிழ்ந்து விடுவதில்லை, மறைந்து விடுவதில்லை. எனவே கேதுவுடன் இணையும் ஒரு கிரகத்திற்கு நன்மை, தீமைகளைச் செய்யும் தகுதி இருக்கும்.

இந்து லக்னம் என்பது என்ன?

ஒரு மனிதனின் எதிர்கால பலனை அறிவதற்கு ஜோதிடத்தில் ஏராளமான வழிமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவைகளாக  ஒரு ஜாதகத்தின் ராசிக்கட்டம், நவாம்சம், பாவகம் மற்றும் மனித வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும், நன்மை, தீமைகளையும் பகுதி பகுதியாக பிரித்து சொல்லும் தசா புக்தி வருடங்கள் உள்ளிட்டவைகளைச் சொல்லலாம்.
மேலே சொன்னவைகள் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களாகவும், ஒரு ஜாதகத்தை தாங்கி நிற்கின்ற நிரந்தர தூண்களாகவும் இருக்கும். ஆயினும் ஜோதிடம் இத்துடன் முடிந்து விடுவது இல்லை.
ஒருவரின் எதிர்காலத்தை துல்லியமாகச் சொல்வதற்கு ஏராளமான விதிகளும், விதிவிலக்குகளும், அவற்றின் துணை அமைப்புகளும் இந்த மாபெரும் சாஸ்திரத்தில் உள்ளன. அவற்றில் முக்கியமானவைகளாக இந்து லக்னம், திதி சூன்யம், புஷ்கர நவாம்சம், தாரா லக்னம் போன்றவைகளைச் சொல்லலாம். இதிலும் ஒரு குறிப்பிடத்தக்க அமைப்பு இப்போது நாம் பார்க்க இருக்கும் இந்து லக்னம் எனப்படுவது.
ஜோதிட சாஸ்திரம் வேதத்தின் கண் எனப்படுகிறது. அதன் இரு கண்களாக சூரியனும், சந்திரனும் இருக்கின்றன. இதில் இந்து லக்னம் எனப்படுவது இந்த இருவரையும் இணைத்து சூரியனின் அடிப்படையிலான லக்னத்தையும், சந்திரனின் அடிப்படையிலான ராசியை வைத்தும் கணிக்கப் படுகிறது.
இந்து என்ற சொல்லிற்கே சந்திரன் என்றுதான் அர்த்தம். இந்து லக்னத்தை கணக்கிடுவதற்கு முன் கிரகங்களின் கதிர்வீச்சு எனப்படும் ஒளி அளவினைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  இதனை நம்முடைய மூலநூல்கள் “கிரக களா பரிமாணம்” என்ற பெயரில் குறிப்பிடுகின்றன.
கிரக களா பரிமாணம் என்ற சம்ஸ்கிருத சொல்லிற்கு கிரகங்களின் கதிர்வீச்சு அளவு என்று பொருள் கொள்ளலாம். இதன்படி பூமிக்கு இதர கிரகங்களாலும், சூரியனாலும் கிடைக்கும் ஒளி அளவுகள், எண்களாக மாற்றப்பட்டு நம்முடைய ஞானிகளால் அளவிடப் பட்டு இருக்கின்றன.
இந்து லக்ன கணக்கின்படி, கிரகங்களின் தலைவனான சூரியனால் பூமிக்கு கிடைக்கும் ஒளியளவு எண் 30 எனவும்,
பூமிக்கு மிக அருகில் இருந்து சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கும் சந்திரனின் ஒளியளவு 16 எனவும், அதிகாலை கிழக்கு வானில் வெண்மையாக பளிச்சிடும் சுக்கிரனின் ஒளிப் பிரதிபலிப்பு எண் 12 எனவும், சுக்கிரனை அடுத்து அதிக பிரதிபலிப்பு திறன் கொண்ட குருவின் ஒளி எண் 10 எனவும், அதனையடுத்து புதனின் ஒளி எண் எட்டாகவும் நமது ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது.
இவை தவிர்த்து பூமிக்கு வெகு அருகில் இருக்கும் பாபக் கிரகமான செவ்வாயின் ஒளி எண் 6 எனவும், சூரியனை வெகு தொலைவிலிருந்து சுற்றி வரும் ஒளியற்ற, முதன்மை பாபக் கிரகமான சனியின் ஒளிப் பிரதிபலிப்பு எண் குறைந்த அளவாக ஒன்று எனவும் தொகுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது.
ஜோதிடத்தில் சுபக் கிரகங்களாக சொல்லப்படும் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் மற்றும் பாபக் கிரகங்களாகச் சொல்லப்படும் சனி, செவ்வாயின் வரிசை முறைகள் மேலே உள்ள கிரகங்களின் ஒளிப் பிரதிபலிப்புத் திறனை வைத்தே சொல்லப் பட்டன என்பதை “உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா” என்ற தலைப்பில் முன்னர் மாலைமலரில் வெளிவந்த கட்டுரைகளில் “சுபர்-அசுபர் அமைந்த சூட்சுமம்” எனும் தலைப்பில் ஆய்வுப்பூர்வமாக விளக்கி இருக்கிறேன்.
இந்தக் கிரக களா பரிமாண வரிசையில் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் ராகு-கேதுக்களுக்கு இடம் தராமல் மற்ற ஏழு கிரகங்களை மட்டுமே சொல்லி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணம் என்னவெனில் கிரகங்களின் ஒளிப் பிரதிபலிப்பு நிலையை மட்டும் வைத்தே இந்த எண்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. சாயா கிரகங்கள் எனப்படும் ராகு-கேதுக்கள் ஒளியைப் பிரதிபலிக்க முடியாத வெறும் இருளான நிழல்கள் மட்டுமே என்பதால் அவற்றிற்கு இந்து லக்ன அமைப்பில் இடமில்லை.
ராசிச் சக்கரத்தில் ஒரு வீட்டிற்கு மட்டும் அதிபதிகளான சூரிய, சந்திரர்களின்
 கிரக களா பரிமாண எண்களான 30 மற்றும் 16 ஐ அப்படியே வைத்துக் கொண்டு, இரண்டு வீடுகளை கொண்ட புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகியவற்றிற்குத் தரப்பட்ட எண்களை இரட்டிப்பாக்கினால் இதன் கூட்டுத் தொகை 120 ஆக வரும். அதன்படி அமைக்கப்படும் ராசி சக்கரம் கீழ்கண்டவாறு இருக்கும்.
இந்த எண்களின் கூட்டுத் தொகையான 120 என்பது ஜோதிடத்தில் ஒரு தவிர்க்க முடியாத எண். நம்மைச் சுற்றி பரந்து வியாபித்திருக்கும் ராசி எனப்படும் வான்வெளி வேதஜோதிடத்தில் மூன்று 120 டிகிரிகளாகக் கொண்ட பகுதிகளாகவே பிரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஜோதிடத்தில் மனிதனின் முழு ஆயுட்காலம் எனப்படும் விம்சோத்ரி தசாபுக்தி வருட அளவுகளும் மொத்தம் 120 தான்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதுக்குடையவரின் எண்ணையும், ராசிக்கு ஒன்பதுக்குடையவரின் எண்ணையும் கூட்டினால் வரும் எண்ணை பனிரெண்டால் வகுத்து, மீதி வரும் எண்ணை, ராசியில் இருந்து எண்ணினால் அது எந்த வீட்டில் முடிவடைகிறதோ அதுவே அவருடைய இந்து லக்னம் எனப்படும்.
இப்படிக் கணக்கிடப்படும் இந்து லக்னத்தில் இருக்கும் கிரகங்களின் தசை நடக்கும் போது ஒருமனிதன் அளவற்ற செல்வத்தையும், நன்மைகளையும் அடைவான்  எனவும் மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருப்பான் எனவும் மூலநூல்கள் சொல்கின்றன. இந்து லக்னத்தில் கிரகங்கள் இல்லாவிட்டாலும் அந்த லக்னத்தைப் பார்க்கும் கிரகத்தின் தசையிலும், நற்பலன்கள் கிடைக்கும் என்று மகரிஷி காளிதாசரின் உத்திர காலாமிர்தம் கூறுகிறது.
இந்து லக்னம் காண கூட்டி வரும் எண் 12 ஆல் வகுக்க முடியாமல் அதனுள் அடங்கிய சிறிய எண்ணாக இருந்தால், ராசியில் இருந்து அந்த எண்ணைக் கொண்டு அப்படியே எண்ணி, வரும் வீட்டினை இந்து லக்னமாக எடுத்துக் கொள்ள  வேண்டும்.
உதாரணமாக ஒருவர் மிதுன லக்னம், தனுசு ராசியில் பிறந்திருந்தால் ஜென்ம லக்னமான மிதுனத்திற்கு ஒன்பதாம் அதிபதியான சனியின் எண் ஒன்றையும், ராசிக்கு ஒன்பதாம் அதிபதியான செவ்வாயின் எண் ஆறையும் கூட்ட ஏழு வருகிறது. தனுசு ராசியில் இருந்து ஏழு வரை எண்ணினால் மீண்டும் மிதுனமே வரும். அதன்படி மிதுன லக்னம், தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்து லக்னமாக அவரது ஜென்ம லக்னமான மிதுனமே வரும்.
அதேபோல வேறு ஒருநிலையில், பனிரெண்டால் வகுத்து மீதி வரும் எண் பூஜ்யம் என்று வருகின்ற பட்சத்தில், ராசிக்கு முந்திய வீட்டினை இந்து லக்னமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற நிலை கன்னி லக்னம், கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு வரும் அதாவது கன்னி, கும்பம் இரண்டின் ஒன்பதாம் அதிபதிகள் சுக்கிரன் ஒருவரே என்றாகி 12 ஐ 12 ஆல் கூட்ட வரும் 24 ஐ 12 ஆல்  வகுக்கும் போது மீதி பூஜ்யம் என்று வருகின்ற நிலையில் கும்பத்திற்கு முந்தைய மகரத்தை இந்து லக்னமாக கொள்ள வேண்டும்.
மேம்போக்காக பார்க்கின்ற நிலையில் ஒருவரது ஜாதகம் யோகமற்றது போல தெரிந்தாலும் ஜாதகர் மிகவும் யோகமாக, அனைத்து வசதிகளுடனும் பெரும் கோடீஸ்வரராக வாழ்ந்து கொண்டிருப்பார். அதற்கு இந்த இந்து லக்ன அமைப்பு காரணமாக இருக்கும்.
அதேநேரத்தில் இந்து லக்னம் என்பது ஜாதகத்தில் பலன் சொல்வதற்கு தேவைப்படும் ஒரு துணை அமைப்பு மட்டும்தான். இந்து லக்னத்தில் கிரகம் இருந்தாலே அந்த கிரகத்தின் தசையில் கோடிகளைக் கொண்டு வந்து கொட்டி விடும் என்று சொல்லி விட முடியாது. ஜாதகத்தின் மற்ற அமைப்புகளும் வலுவாக இருக்க வேண்டும்.
மேலும் ஒரு ஜாதகத்தின் ஆதார நாயகனான லக்னாதிபதி வலுவாக இருக்கும் பட்சத்தில்தான் அனைத்து யோகங்களும் செயல்படும் என்பதை நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். எத்தகைய யோகமாக இருந்தாலும் அதை அனுபவிக்க லக்னாதிபதியின் தயவு கண்டிப்பாகத் தேவை. லக்னாதிபதி வலுப்பெற்ற ஜாதகங்களில் இந்து லக்னத்தின் பலன்கள் மிக அதிகமாகவும் வலுக்குறைந்த ஜாதகங்களில் ஓரளவிற்கும் இருக்கும்.
ஒரே ஒரு விதியை மட்டுமே வைத்து ஜாதகத்தின் அனைத்து நிலைகளையும் கணிக்க முடியாது என்பது இந்து லக்னத்திற்கும் பொருந்தும். ஜோதிடம் என்பது நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் சொன்ன அனைத்து விதிகளையும் ஒரு சேர மனதில் கொண்டு வந்து, அதில் எந்தெந்த விதிகள் இந்த ஜாதகத்திற்குப் பொருந்துகிறது என்பதைச் சரியாகக் கணித்து பலன் அறிவதுதான்.
இதற்காகத்தான் ஜோதிடத்தில் விதிகளை விட விதி விலக்குகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி எழுதுகிறேன். அதுபோல அடிப்படை வலுவாக இருந்தால்தான் நீங்கள் எதனையும் அனுபவிக்க முடியும் மற்றும் கிடைத்தவைகளை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்.
கிரகங்கள் தரும் யோகத்தை ஒரு மனிதன் அனுபவிக்க அவனது ஜாதகத்தை வழி நடத்தும் லக்ன ராஜனான லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்து லக்னம் உள்ளிட்ட எந்த ஒரு யோகமும் பலன் தராது. ஜாதகத்தில் இருக்கும் யோகங்கள் விழலுக்கு இறைத்த நீராகப் போய் விடும்.
கிரக வலு என்பது என்ன?
ஒரு கிரகம் நீசம், பகை, அஸ்தமனம், கிரகணம் போன்ற நிலைகளில் இல்லாமல் இருந்து, பாபக் கிரகங்களின் தொடர்புகள் இல்லாமல், சுபக் கிரகங்களின் பார்வை, இணைவு போன்றவற்றை அடைந்திருந்தால் அது வலுவாக இருக்கிறது என்று பொருள்.
அதேநேரத்தில் மேற்கண்ட நீச, அஸ்தமன, கிரகண நிலைகளுக்கும் விதி விலக்குகள் இருக்கின்றன. ஒரு கிரகம் நீசமானாலும் முறையான நீச பங்கத்தை அடைந்திருந்தால் அது வலுவாக இருக்கிறது என்றே பொருள். இன்னும் குறிப்பாகச் சொன்னால் அது உச்ச கிரகத்தின் தொடர்பையோ, பெரும் ஒளியின் பிரதிநிதிகளான பவுர்ணமிச் சந்திரன் மற்றும் பங்கமற்ற குருவின் பார்வை மற்றும் தொடர்பையோ பெற்றிருந்தால் நீசபலன் முற்றிலும் மாறி நீசத்திற்கு நேரெதிரான உச்ச பலத்துடன் இருக்கும்.
அதேபோல ஒரு கிரகம் சூரியனுடன் இணைந்து அஸ்தமனம் அடைந்திருந்தாலும், அந்தக் கிரகம் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தன்னுடைய சொந்த வீட்டில் இருக்கும் ஆட்சித் தன்மையை அடைந்து, எந்த வீட்டோடு பரிவர்த்தனை பெற்றுள்ளதோ அந்த வீட்டின் பலனைத் தரும்.
எனவே ஜோதிடத்தில் எதையும் மேம்போக்காக கணித்து விட முடியாது. எதிர்காலத்தைக் காட்டும் இந்த மாபெரும் சாஸ்திரத்தினுள் மூழ்கி பலன் என்னும் முத்துக்களை அள்ள பரம்பொருள் கொடுக்கும் தனிப்பட்ட ஞானமும், நீடித்த அனுபவமும் தேவை.
மேன்மை வாய்ந்த இந்து லக்னத்தில் சுபக் கிரகங்கள் இருந்து தசை நடத்தும் போது ஒருவர் அந்த தசையில் மிகச் சிறந்த நல்ல பலன்களை அடைவார் என்று நம்முடைய மூல நூல்கள் குறிப்பிடுகின்றன. பாபக் கிரகங்கள் இந்து லக்னத்தில் இருந்தாலும் குறைந்த அளவு நற்பலன்கள் உண்டு எனவும் நமது கிரந்தங்கள் சொல்லுகின்றன.
அதேநேரத்தில் இந்து லக்னத்தில் இருக்கின்ற பாபக் கிரகம் சுபத்துவம் அடைந்திருந்தால் சிறந்த நற்பலன்களை சுபக் கிரகத்திற்கு இணையாகத் தரும்.
இந்து லக்னத்தில் ராகு, கேது, சனி, செவ்வாய், சூரியன், தேய்பிறைச் சந்திரன் போன்ற பாபக் கிரகங்கள் இருப்பினும், அவை முற்றிலும் சுபத்துவம் அடைந்திருக்கும் போது, அந்தக் கிரகம் தனக்குரிய காரகத்தின் வழியாக, அந்த ஜாதகருக்கு அபாரமான நற்பலன்களைச் செய்யும். மற்றும் நமது மூல நூல்களில் சொல்லியுள்ளபடி கோடிகளைக் கொண்டு வந்து குவித்து ஜாதகரை சொகுசு வாழ்வு வாழச் செய்யும்.

Wednesday, July 24, 2019

6ம் இடம் மற்றும் 8ம் இடம் ஒரு வித்தியாசமான பார்வை

6 - ஆம் இடம். ருண ரோக சத்ரு ஸ்தானம் (கடன், நோய், எதிரி) ஏன்?
ஆறாமிட அதிபதி மற்றும் ஆறாம் இடத்தில் அமர்ந்த கிரகங்களின் தசை அல்லது புத்தியில் கடன், நோய் அல்லது எதிரி தொந்தரவுகள் உண்டு.
முன்ஜென்ம கர்ம வினைகளைப் பொருத்தே, இந்த ஜென்ம பிறப்பு நல்லதாகவோ அல்லது பாதகமாகவோ அமையும்.
6 - ஆம் இடத்தைத் தெரிந்து கொள்ளும் முன் 8 - ஆம் இடத்தைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம். 8 எட்டாம் இடம் என்பது மனைவி, பங்குதாரர்கள் மற்றும் எதிராளி (புதிதாக அறிமுகமாகுபவர்கள்), பொதுஜனத் தொடர்பு. இவர்களின் கையிருப்பு பணம் மற்றும் அசையும் சொத்துக்களை குறிப்பது. பொதுவாக ஒருவர் நமக்கு பணம் தருகிறார் அல்லது கடன் தருகிறார் என்றால் அது 8 ஆம் இடம்(அவருக்கு இரண்டாமிடம்). நம் கைக்கு பணம் வந்து சேருவது 2 ஆம் இடம்.
சரி 6-ஆம் இடத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?
நமக்கு பணம் கொடுத்தவர் 7 ஆம் இடம். அவருக்கு விரயம் 6 ஆம் இடம்.
ஒருவரின் விரயமே (6 ஆம் இடம்) நமக்கு கடன் ஆகிறது.
சரி, ஒருவருக்கு 6 ல் அதிக கிரகம் இருந்து அதன் தசை மற்றும் புக்தி நடந்தால், அவர் பூர்வ ஜென்ம கடனை அடைக்க பிறந்து இருக்கிறார் எனலாம். ஏனென்றால் ஆறாமிடம் பூர்வ புண்ணியத்துக்கு இரண்டாமிடம். (முற்பிறவி கையிருப்பு பணம், கொடுக்காமல் இருந்திருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் அல்லது ஏமாற்றி இருக்கலாம்).
எனவே ஜாதகர் 6 ல் உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடக்கும் போது கடன் படுவார். சொத்து பத்துக்கள் அதிகம் இருந்து கடன் பட வாய்ப்பு இல்லை என்றால், எவரிடமாவது கொடுத்து (கோர்ட் கேஸ் என்று பணத்தைக் கொடுத்து இழத்தல், சீட்டுப்போட்டு ஏமாறுதல், மனைவி,எதிராளி, பங்குதாரர்கள் இவர்களிடம் ஏமாறுவது, லஞ்சம் கொடுத்து ஏமாறுவது, உதவி செய்து ஏமாறுவது, உறவினர்களிடம் கொடுத்து ஏமாறுவது இது போன்ற பல).
சரி, கடனும் படவில்லை. பணத்தை இழந்து எதிரியையும் சம்பாதிக்கவில்லை, ஜாதகர் உஷாராக இருக்கிறார் என்றால், கடைசி ஆயுதம் நோய்தான். நோய் வர ஜாதகர் கடன் பட்டே ஆகவேண்டும். அல்லது நோயின் கடுமையை(உடல் உறுப்புகளை இழத்தல், நோயுடனே வாழ்வது) ஜாதகர் அனுபவித்தே ஆக வேண்டும். இவ்வாறு ஜாதகர் கடன்பட்டு பணத்தை இழந்தே ஆகவேண்டும்.
ஏனென்றால் 8 ஆம் இடத்திற்கு லாபஸ்தானம் 6 ஆம் இடம். ஏழாம் இடத்திற்கு இரண்டாம் இடத்திற்கு (எதிராளிக்கு) பணம் போய்ச் சேர வேண்டும்.
இப்பொழுது புரிந்திருக்கும். எட்டாம் இடத்திற்கு ஏன் லாபஸ்தானம் ஆறாம் இடம் என்று. அதனால் கடன் வாங்கியவர்கள், அடுத்தவரை ஏமாற்றியவர்கள், நம்மை மதித்து பணம் கொடுத்தவர்களுக்கு, அந்தந்த ஜென்மத்திலேயே கடனை திருப்பி சரியாக செலுத்திவிட வேண்டும். இல்லையென்றால் பூர்வ ஜென்ம கர்ம வினைப்படி இந்த பிறப்பில் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் அதிக கிரகம் இருந்து தசை புத்தி நடக்கும்போது ஜாதகர் கடன்பட்டு பூர்வஜென்ம கடனை Balance செய்வார். 

Monday, July 22, 2019

விபரீத ராஜ‌யோகம்

துஷ்ட ஸ்தானம் என்பது 3, 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும்.

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

உதாரணத்திற்கு, சிம்ம லக்கினத்திற்கு, சனி 6ஆம் இட அதிபதி. அவர் ஜாதகனின் 12ஆம் வீட்டில் (கடகராசியில்) சந்திரனுடன் இருந்தால், அது விபரீத ராஜ‌யோகம் ஆகும்!

சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள் ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும். கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.

Tuesday, July 16, 2019

மூச்சு

ஜாதகத்தில் குரு+கேது சேர்க்கை உள்ளவர்களால் அதிக நேரம் மூச்சை அடக்கியிருக்க முடியும். கேதுவின் அம்சமான மீன்கள் நாம் சுவாசிப்பது போல் காற்றை நேரடியாக மூக்கு வழியாக சுவாசிப்பதில்லை. ஆனால் வாய் வழியே நீரை உள்ளிழுத்து நீரில் உள்ள பிராண வாயுவை நேரடியாக ரத்தத்தில் சேர்த்துக்கொள்கிறது. 
ஜாதகத்தில் குரு+ராகு சேர்க்கை உள்ளவர்களால் அதிக நேரம் மூச்சை அடக்கமுடியாது. ராகுவின் அம்சமான பன்றிகள் வேக வேகமாக மூச்சை விடுபவை , அது போல் குரு+ராகு சேர்க்கை உள்ளவர்கள் வேக வேகமாக மூச்சை விடுவார்கள். பன்றி போல் மூச்சு விட்டால் அது ஆயுளைக்குறைக்கும். 
மீன் மூச்சு விடுவது குரு+கேது 
பன்றி மூச்சு விடுவது குரு+ராகு
ஆமை மூச்சு விடுவது குரு+சனி

புதஆதித்ய யோகம்

சூரியன் + புதன் கிரக சேர்க்கை....
பிறப்பு ஜாதகத்தில் இருந்தால் என்ன பலன் பார்ப்போமா நண்பர்களே.....
இது புதஆதித்ய யோகம்... என்றும் நிபுனத்துவ யோகம்.... என்றும்...... ஜோதிடத்தில் இந்த கிரக சேர்க்கைக்கு சொல்லப்பட்டுள்ளது.
இந்த சேர்க்கையில் தீய பலன்கள் எதுவும் கிடையாது.
செல்வச் சேர்க்கையும் எதுவும் கிடையாது.
(குரு சேர்ந்திருக்கும்போது மாறும்.... ஜாதக அலங்காரம் பாடல் 491 ""சன்மம் தன்னில் மதிமகன் சூரியகுருவும் மகிழ்ந்து நிற்கில்... சீறேறு தனம் படைத்து புலவன் ஆவான்""... என சொல்லப்பட்டுள்ளது.
இங்கு குரு இருப்பதால் செல்வம் எடுக்கப்படுகிறது. இதுபற்றி விரிவாக இன்னொரு பதிவில் ஆராயலாம்)
இந்த சூரியன் புதன் கிரக சேர்க்கை உள்ள ஜாதகர்..... அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் அதாவது நிபுணத்துவம் பெற்று இருப்பார்கள்.. இச்சேர்க்கை உள்ள ஜாதகரை கல்வியில் சிறந்தவராக்கும்.... மிகுந்த அறிவாற்றல் உள்ளவராகவும்.... மேலும் வெளிப்படையாக பேசக் கூடியவராக இருப்பார்..
என்னுடைய ஜோதிட அனுபவ வகையில்..... யுகேஜி படிக்கும் குழந்தை.... நான்காவது ஐந்தாவது பாட புத்தகத்தை கூட எளிதில் படித்து புரிந்துகொள்ளும் தன்மை பெற்றவராக இருக்கிறார்.
இந்த சேர்க்கை உள்ளவர்கள் அன்றாடம் படிக்க கூடியவராகவும் எதையும் வேகமாக புரிந்து கொள்பவராகவும்..... அறிவாற்றல் மற்றும் பேறறிவு உள்ளவராக இருப்பார். கற்ற கல்விக்கான நற்பலன்களையும் அனுபவிப்பார். காதலில் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வார்
நல்ல நண்பர்கள் சேர்க்கை உள்ளவராகவும்..... தொடர்ந்து படிக்கும் எண்ணம் ஏற்பட்டு அடுத்தடுத்து பட்டங்கள் வாங்குவதும் இவர்களுக்கு நடக்கும்.
இந்த கிரக சேர்க்கை அமைப்பில்.... சூரியன் கடன் கொடுப்பவரும்... வாங்குபவருமான காரகத்துவத்தையும்....
புதன் வங்கியையும் குறிக்கும் என்பதனால்..... இவர்களுக்கு கடன் எளிதில் கிடைக்கும்.
இதை படிக்கிற பேங்க் மேனேஜர் யாராவது இருந்தீங்கன்னா.... எங்களைப் போன்ற ஜோதிடர்களை அணுகி அல்லது ஜாதகத்தை நீங்களே வாங்கி பார்த்துட்டு.... ஜாதகருக்கு கடன் கொடுக்கலாம்...
கடன் வாங்கினாலும் 100% கட்டிவிடுவார்....
அதேபோன்று (டிரேடிங்) வாங்கி விற்கும் வியாபாரம் செய்தாலும் மிகச் சிறப்பான நிலையும்.... நல்ல எதிர்காலமும் உண்டு....
சூரியன் அப்பாவையும் குறிக்கும் என்பதால்.... இவரின் ஜாதகப்படி
அப்பாவுக்கு நட்பு வட்டம் அதிகமாக இருக்கும்.. அப்பா கல்வியாளராகவும்.. அறிவாளியாகவும்.... வியாபாரத்தில் நாட்டம் உடையவராகவும்... சிறந்த பேச்சாற்றல் மிக்கவராகவும்.... நகைச்சுவையாளராகவும்.... சமாதான பிரியராகவும்.... இருப்பார்..
புதன் மாமா மற்றும் நண்பர்களை குறிப்பதால்.....
இவரின் மாமா மற்றும் நண்பர்கள் வெளிப்படையானவர்களாகவும்.... அவர்கள் அரசு தொடர்பில் இருப்பவர்களாகவும்... இருப்பர்.

வக்கிர கதி பலன்

வக்கிர கதி பலன் உரைத்தல்
இந்த ஜாதகத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் வக்கிரகதியில் சனி துலாத்தில், குரு கன்னி ராசியில்
செவ்வாயும் சனியும் பரம எதிரிகள்
சனியும் குருவும் நல்ல நட்பு
சனி முன்னோக்கி செவ்வாயை நோக்கி செல்கிறது தொழிலில் தீவிரமாக எதிரியினால் பிரச்சனை ஏற்படுகிறது சனி பயந்து வக்கிர கதியாகி குருவிடம் நோக்கி செல்கிறது.
குருவின் உதவியால்
செவ்வாயின் பிரச்சனையிலிருந்து சனி தப்பியது.

பூச்சியினால் அவதி

கோச்சார சனி கோசார கேது ஜாதகத்தில் உள்ள ராகு, குருவை சந்திக்கும் நேரம் அந்த அந்த காலகட்டத்தில் ஜாதகர் ஏதாவது ஒரு பூச்சியினால் தினமும் தூங்காமல் அவதிப்படுவார்.. 
குறிப்பு: 
சனி- இருட்டு,
ராகு- கடித்தல், 
கேது - பூச்சிகள் ( insects)
குரு - Native...

பல‌ பெண்களுடன் தொடர்பு

குரு ,சுக்கிரன் ஏதாவது ஒரு கட்டத்தில் இருந்து, குருவுக்கும் சுக்கிரனுக்கும் அடுத்த கட்டத்தில் அல்லது அதற்கு முன் கட்டத்தில் புதன் அமர்ந்து இருந்தாள், அந்த ஜாதகருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.... இது பொதுப்பலன் மட்டுமே. உங்களுடைய ஜாதகத்தை பார்த்து விட்டு கூறவும்.